பதிவு செய்த நாள்
07
நவ
2024
10:11
சென்னை; சென்னையில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி சன்னிதானம் விதுசேகர பாரதீ சுவாமிகள், நேற்று காலை, பழவந்தாங்கல் அபிநவ கணபதி கோவில் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். நங்கல்லுார் குருகுலத்திற்கு விஜயம் செய்த அவர், மாணவர்களின் கல்வித்திறன் குறித்து கேட்டறிந்தார். சென்னை, பழவந்தாங்கலில் அமைந்துள்ளது அபிநவ கணபதி கோவில். சிருங்கேரி மடம் சார்பில், 1998ம் ஆண்டு இக்கோவில் அமைக்கப்பட்டு, சிருங்கேரி மடத்தின் பாரதீ தீர்த்த மகா சன்னிதானத்தால், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இக்கோவிலில், சில மாதங்களுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை, சன்னதிகளுக்கு சிருங்கேரி சன்னிதானம் விதுசேகர பாரதீ சுவாமிகள், புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தார். இந்நிகழ்வில், அமைச்சர்அன்பரசன், ஆலந்துார் மண்டல குழு தலைவர் சந்திரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆதம்பாக்கம் கோவில்; அதன்பின், ஆதம்பாக்கம் கற்பக விநாயகர் கோவிலுக்கு சென்ற, சிருங்கேரி சன்னிதானம் அங்கு, சாரதாம்பாளை தரிசித்தார். நேற்று மாலை, நங்கநல்லுாரில் உள்ள மேதா குருகுலம் சென்ற சன்னிதானம், மாணவர்களின் கல்வித் திறன் குறித்து கேட்டறிந்தார். அங்கிருந்து, ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்ற சன்னிதானம், 20 நிமிடங்களுக்கு மேல் ஆஞ்சநேயரை தரிசித்தார். பின், ராம மந்திரத்தில், சிருங்கேரி சன்னிதானம் பக்தர்களுக்கு வழங்கிய அருளாசி: கடந்த, 12 ஆண்டிற்கு முன் சாதுர்மாஸ்ய விரதத்திற்காக சென்னை வந்த மகா சன்னிதானம், நங்கநல்லுாருக்கு வந்து அருளாசி வழங்கி ஆசிர்வதித்தார். நங்கநல்லுாருக்கும், சிருங்கேரிக்கும் குரு, சிஷ்ய சம்பந்தம் உள்ளது. சிருங்கேரி சாரதா சங்கர பக்த மண்டலி வாயிலாக, சிருங்கேரி ஆச்சார்யார் உற்சவம், நவராத்திரி உற்சவம், பாராயணங்கள் உள்ளிட்ட ஆன்மிக சேவைகளை ஆற்றி வருகின்றனர். அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். சிருங்கேரிசிஷ்யர்கள் ஆன்மிக சேவையை தொடர வேண்டும். குருக்களின் ஆசிர்வாதம் எப்போதும் சிஷ்யர்களுக்கு கிடைக்கும். சாரதா சங்கர பக்தமண்டலி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆன்மிக சேவைகள், தொய்வின்றி தொடர வேண்டும். அதற்கு குருவின் ஆசிர்வாதம் தொடர்ந்து கிடைக்கும். இவ்வாறு அருளாசி வழங்கினார்.
தர்மத்தை விட்டு விடாதீர்!; மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு சங்கர மடத்திற்கு நேற்றிரவு, சிருங்கேரி சன்னிதானம் விஜயம் செய்தார். தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை உள்ளிட்டோர் அவரிடம் ஆசி பெற்றனர். பின், பக்தர்களுக்கு, சிருங்கேரி சன்னிதானம் வழங்கிய அருளுரை: யார் யார் எப்படி வாழ வேண்டும்; என்னென்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக் கூடாது என்பது வேதங்கள், சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன. அதன்படி நடப்பவர்களுக்கு தகுந்த பலனை அம்பாள் கொடுப்பார். தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில், சாஸ்திரப்படி வாழ வேண்டுமா என சிலர் கேட்கின்றனர். இப்போது அனைத்து வசதிகளும் வந்தாலும், துன்பம் தீரவில்லை. தர்மப்படி வாழ்ந்தால் மகிழ்ச்சி கிடைக்கும்; அதர்ம வழியில் சென்றால் துன்பம்தான் வந்து சேரும். எனவே, காலம் எவ்வளவு மாறினாலும், எவ்வளவு வசதிகள் வந்தாலும், தர்மத்தை விட்டுவிடக் கூடாது. இவ்வாறு சன்னிதானம் அருளுரை வழங்கினார்.