பதிவு செய்த நாள்
07
நவ
2024
11:11
மயிலாடுதுறை; எலந்தங்குடி வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த வெற்றி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4ம் தேதி பூர்வாங்க பூஜையும், 5ம் தேதி யாகசாலை பூஜையும் தொடங்கின. இன்று 4ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தன. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. காலை 10 மணிக்கு தருமபுரம் ஆதீன கட்டளை மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அப்போது ஒரே நேரத்தில் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், ஜெயவீர ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன், பிரம்மா மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூஜைகளை சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர். முடிவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.