பதிவு செய்த நாள்
09
நவ
2024
09:11
சபரிமலை; சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஆதார் கார்டு எடுத்து வருவது அவசியம் எனவும், பதினெட்டாம் படிக்கு மேல் பகுதியில் சென்றதும் மொபைல் போனை சுவிட் ஆப் செய்துவிட வேண்டும் எனவும் தேவசம்போர்டு தலைவர் அறிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டலகால பூஜைகளுக்காக வரும் 14ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. இந்நிலையில் மண்டலகால மகரவிளக்கு பூஜை காலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பத்தனம் திட்டாவில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது:– முன் பதிவு வசதி மண்டலகால பூஜைகளின் போது கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்கள் முன் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பத்தாயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பம்பா , எருமேலி, வண்டிப்பெரியார் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்பாட் புக்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. தினமும் 18 மணி நேரம் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கபட உள்ளனர். அதிகாலை 3 மணிக்கு சபரிமலை நடைதிறக்கும். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களும், ஸ்பா ட் புக்கிங் செய்ய வரும் பக்தர்களும் கையில் ஆதார் கார்டு கொண்டுவர வேண்டியது அவசியம். அதுபோல ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு கே .எஸ். ஆர்.டி.சி பஸ் புக்கிங் செய்யவும் ஆன்லைனில் லிங்க் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 40 பக்தர்களுக்கும்
அதிகமாக பக்தர்கள் குழுவாக உள்ளவர்கள் 10 நாட்களுக்கு முன்பு கே .எஸ்.ஆர்.டி.சி பஸ்ஸில் இருக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம். நிலக்கல் பகுதியில் வாகனங்கள் பார்க்கிங் செய்யும் பகுதியில் உள்ள டோல் பகுதியில் பாஸ்ட்டிராக் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுபோன்று சபரிமலைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் விதமாக ஆட்டோமேட்டிக் வெகிகிள் நம்பர் பிளேட்டிஜிடெஷன்சிஸ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விபத்து காப்பீடு; மண்டல பூஜை காலத்தில் முதற்கட்டமாக 383 பஸ்களும், இரண்டாம் கட்டமாக 550 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் எண்ணிக்கையை பொறுத்து பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். சபரிமலை வரும் பக்தர்களுக்கும் தினசரி சம்பளத்தில் பணியில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கும் 5 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு வழங்கப்படும். விபத்தில் மரணம் ஏற்பட்டால் 5 லட்சம் ரூபாய் அவருடைய குடும்பத்திற்கு வழங்கப்படும். அதற்கான பிரீமியம் தொகையை தேவசம்போர்டு செலுத்தும். சபரிமலை அமைந்திருக்கக்கூடிய பத்தனம்திட்டா மாவட்டம் மட்டுமல்லாது, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா போன்ற பக்கத்து மாவட்டங்களில் விபத்தில்
சிக்கினாலும் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும். பதினெட்டாம்படிக்கு மேலே செல்லும் பக்தர்கள் அனைவரும் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். ஆன்லைனில் தரிசனத்துக்காக முன்பதிவு செய்துவிட்டு சபரிமலைக்கு வர இயலாதவர்கள், அவர்களுடைய முன்பதிவை ரத்து செய்து மற்ற பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் உதவ வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.