ஹிந்து தர்மத்திற்கு அநீதி என்றால் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் ஸ்ரீவி., ஜீயர் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2024 11:11
மதுரை: ஹிந்து தர்மத்திற்கு அநீதி ஏற்பட்டால் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என ஸ்ரீவில்லிப்புத்துார் ஜீயர் சுவாமிகள் பேசினார். மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் உழவாரப்பணி நடந்தது. இதில் ஸ்ரீவில்லிப்புத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜ சுவாமிகள் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது: இன்று நமக்கு அவசியம் தேவைப்படுவது ஆன்மிகம். கடவுளின் நாமத்தை கூறினால் உடலும் மனமும் சுத்தமாகி மன அமைதி கிட்டும். ஒரு தாய்க்கு குழந்தையின் பசியை எப்போது தீர்க்க வேண்டும் என தெரியும். அதுபோல கஷ்டம் வரும்போது கடவுளை நினைக்கிறோமா என அவர் கவனித்துக் கொண்டே இருப்பார். கஷ்டங்கள் போக கடவுளின் பாதத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். இன்று கடவுள் மறுப்பாளர்கள் உள்ளனர். நம்முடைய பூமி ஹிந்து பூமி. கடவுள் இல்லை என வெளியில் கூறினாலும் உள்ளுக்குள் கடவுளை தரிசித்துக் கொண்டுதான் இருப்பர். குருநாதர் வழிப்படி நாம் நடந்து கொண்டால் புண்ணியம் சேரும். கடவுளின் நாமத்தை சொன்னாலே நமக்கு புண்ணியம் கிடைக்கும். நாம் செய்யக்கூடிய கடமைகள் அனைத்தையும் நம்பிக்கையோடு செய்தால் கடவுள் நம்மோடு பேசுவார். பகவான் பக்தர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு அதிகரித்து வருகின்றனர். ஹிந்து மக்கள், ஹிந்து தர்மத்திற்கு அநீதி இழைத்தாலோ, கடவுளை இகழ்ந்தாலோ அனைவரும் சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும். அதற்கான விழிப்புணர்வு நம்மிடம் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநிலத் தலைவர் தெய்வ பிரகாஷ், மாநிலப் பொருளாளர் ஆதிசேஷன் உட்பட பலர் பங்கேற்றனர்.