பதிவு செய்த நாள்
11
நவ
2024
12:11
ராமநாதபுரம் ; குதிரை எடுப்பு விழாவின் போது நேர்ந்துகிட்டு காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேற்றி வரும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உலையூர் கிராமத்தில் உள்ள மருதாருடையார் அய்யனார் கோயிலாகும். முருகனுக்கு வள்ளி, தெய்வானை போல் மருதாருடையார் அய்யனாருக்கு வலதுபுறம் அன்னபூரணி, இடதுபுறம் புஷ்பகலா என்ற மனைவியும் உள்ளனர்.இங்கு கடந்த நான்கு, ஐந்து தலைமுறையாக மருதாருடையார் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா தொட்டு தொடர்ந்து பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.கிராமத்தில் உள்ள அனைத்து சமூகத்தினர் ஒன்று சேர்ந்து விழாக்களை நடத்துகின்றனர். முக்கியமாக கிராமத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் எருதுகட்டு விழாவின்போது வடம் கட்டிவிட்டு வருகின்றனர்.மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தி விழாக்கள் நடைபெற்று வருகிறது. விழாவின்போது ஆவணி முதல் வாரம் வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் துவங்கும். காப்பு கட்டிய அடுத்த வெள்ளி, சனிக்கிழமை குதிரை எடுப்பு விழா, எருதுகட்டு விழா நடைபெறும்.புத்தூர் கிராமத்தில் இருந்து 7 கி.மீ., குதிரை, தவழும் பிள்ளைகள் ஊர்வலமாக தூக்கிவரப்பட்டு கிராமத்தில் கண்திறப்பு செய்து சிறப்புபூஜை நடைபெறும். இதில் காப்புகட்டும் பக்தர்கள் நீண்ட நாள் திருமணதடை, குழந்தையின்மை, வெளிநாடு வேலை, தீராத நோய் நிறைவேற உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன் வைத்து காப்புகட்டி வருவார்கள். இவர்களின் நேர்த்திக்கடன் அடுத்த திருவிழா நடைபெறுவதற்க்குள் நிறைவேறிவிடும்.அவர்கள் நேர்த்திக்கடனாக நன்கொடை அளித்து வருகின்றனர்.சிறப்பு என்னவென்றால் விழாவின் போது 400 முதல் 500 பேர் நேர்த்திக்கடன் நிறைவேறி சிறப்பு நன்கொடை வழங்கி வருகின்றனர். அதில் குறிப்பாக உலையூர் சுற்றியுள்ள கிராமமக்கள் ஏராளமானோர் இதில் பயனடைந்துள்ளனர்.நினைத்த காரியம் நிறைவேறி வரும் மருதாருடையார் அய்யனார் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது.
எப்படி செல்வது?; முதுகுளத்தூரில் இருந்து 16 கி.மீ., பரமக்குடியில் இருந்து 27 கி.மீ.,
விசேஷ நாள்; ஆவணி முதல் வெள்ளிக்கிழமை, குதிரை எடுப்பு விழா
நேரம்; காலை 6:00 - 12:30 மணி, மாலை 5:00 - 8:30 மணி.
அருகில் உள்ள கோயில்; உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி 30 கி.மீ.,
நேரம்; காலை 5:00 - 12:00 மணி, மாலை 4:00 - 7:30 மணி.