பழநி: பழநி கோயிலில் நாளை மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, இன்று மாலை மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். நாளை மாலை 4.30 மணிக்கு சின்னக்குமாரசுவாமி தங்க மயில் வாகனத்தில் தீப ஸ்தம்பம் அருகே எழுந்தருள்வார். மூலவர் சன்னதியில் இருந்து பரணி தீபம் எடுத்து வரப்பட்டு, உட்பிரகாரதத்தின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு மேல் மேற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு பின் சொக்கப்பனை கொளுத்தப்படும். திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்படும். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் செய்து வருகிறார்.