பதிவு செய்த நாள்
13
நவ
2024
04:11
சென்னை; கோவில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பள்ளிகளில், கடந்த கல்வியாண்டில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி முடித்த, 11 பெண்கள் உட்பட 97 பேருக்கு, நுங்கம்பாக்கத்தில் நேற்று, அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, கல்வி சான்றிதழ்களை வழங்கினார். அதேபோல், ஓதுவார் பள்ளிகளில் மூன்றாண்டு ஓதுவார் பயிற்சி முடித்த 9 பேர், தவில் மற்றும் நாதஸ்வர பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த ஒன்பது பேருக்கும் சான்றிதழ் வழங்கினார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த காலங்களில் முடக்கப்பட்டிருந்த அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், திவ்ய பிரபந்த பாடசாலை போன்ற பயிற்சி பள்ளிகளை சீரமைத்து, மாணவர் சேர்க்கை நடத்தி, பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பயிற்சி முடித்த பெண்கள் உட்பட 115 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 2,000 ஆண்டுகளாக நடந்த போராட்டத்தின் வெற்றியாக இதை கருதுகிறோம். அர்ச்சகர் நியமனம் தொடர்பாக பலர் வழக்குகளை தொடுத்துள்ளதால் அவை அனைத்தும் ஒருங்கிணைத்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த மாத இறுதியில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், 35 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு சேகர் பாபு கூறினார்.