பக்தர்களின் வசதிக்காக அன்னமலை கோவிலில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மண்டபம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2012 10:11
மஞ்சூர்: அன்னமலை முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் மணி மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் "பழநி மலை என்றழைக்கப்படும் அன்னமலை முருகன் கோவிலில் ஆண்டு தோறும் காவடி பெருவிழா, மாதந்தோறும் கிருத்திகை பூஜை மற்றும் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரள உள்ளிட்ட பல்வேறு மாநிலத்திலிருந்து ஏராளமான முருக பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் காட்சி முனை கோபுரம் கட்டப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்ட கோவில் நிர்வாகம், ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையில் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், முதற்கட்டமாக கோவில் வளாகத்தில், பக்தர்களின் வசதிக்காக மணி மண்டபம் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணி துவக்கப்பட்டு நடந்து வருகிறது. "வரும் 2014ம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டையொட்டி, நடக்கும் காவடி பெரு விழாவில் மணி மண்டபம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது, என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.