மயிலாடுதுறை; பெருஞ்சேரியில் கோலாகலமாக நடந்த கண்காணாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பெருஞ்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த கற்பகாம்பாள் சமேத கண்காணாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தாருகாவன முனிவர்களின் ஆணவம் அடக்கப்பெற்று சிவபெருமான் காட்சி அளித்ததால் பேரு பெற்ற முனிவர்கள் இக்கோவிலை அமைத்தனர். இக்கோவிலில் செல்வ விநாயகர், ஸ்வர்ணா கர்ணன் பைரவர், ஐயப்பன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த வருகின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணி முதல் 10.30க்குள் சதுர்த்தி திதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய தனுசு லக்னத்தில் நடந்தது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன், 12ஆம் தேதி முதல் காலை யாகசாலை பூஜைகள் தொடங்கின இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்தி களின் விமான கலசங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அதனை அடுத்து மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பூஜைகளை சாம்பசிவம் சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.