திருவாவடுதுறை கோவிலில் திருமூலர் குருபூஜை; திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2024 03:11
மயிலாடுதுறை; திருவாவடுதுறை கோவிலில் திருமூலர் குருபூஜை விழா- ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் கோவிலில் திருவாவடுதுறை ஆதீன குரு மகா சன்னிதானம் முன்னிலையில் நடந்த திருமூலர் குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் ஆதீனத்திற்கு சொந்தமான ஒப்பிலாமுலையம்மை சமேத கோமுக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோவில் 63 நாயன்மார்கள், 18 சித்தர்களில் ஒருவரும், பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் அருளியவருமான திருமூலரின் முக்தி ஸ்தலமாக போற்றப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி அசுவதி தினத்தன்று திருமூலர் தேவ நாயனார் குருபூஜை விழா நடைபெறும். இவ்வாண்டு ஐப்பசி அசுவதி திருநாளான இன்று கோமுத்தீஸ்வரர் கோவிலின் மேற்கு புறம் உள்ள திருமூலர் சன்னதியில் குருபூஜை விழா நடந்தது. இதனை முன்னிட்டு இன்று காலை 8:30 மணிக்கு திருமந்திரம் முற்றோதல், 9:30 மணிக்கு திருமூலருக்கு சிறப்பு அபிஷேகம், அதனை அடுத்து புதுச்சேரி அஃசி எழிலனின் திருமந்திர சிந்தனை சொற்பொழி நடைபெற்றன. 12 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24வது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாசி வழங்கினார். 12:30 மணிக்கு திருமூலருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் குருமகா சன்னிதானம் உள்ளிட்ட திரளான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து குருமகா சன்னிதானம் திருமந்திரம் கைலாய சித்தர் உரை என்ற நூலை வெளியிட்டார். மதியம் குருபூஜைகள் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.