பதிவு செய்த நாள்
14
நவ
2024
04:11
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ரோப் கார் அமைப்பதற்காக சர்வே பணிகள் இன்று துவங்கியது.
திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் அமைப்பதற்கான முதல் கட்டமாக கடந்த ஆண்டு கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் மலை மேல் ரோப்கார் அமைப்பது சம்பந்தமாக கருத்து கேட்பு நடந்தது. அனைத்து பக்தர்களும் கட்டாயம் அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். இரண்டாம் கட்டமாக 2023 ஆகஸ்ட் மாதம் மலைக்குப் பின்புறம் மலை அடிவாரத்தில் ரோப் கார் அமைப்பதற்கான பகுதிகளில் சென்னை ஐடி காட் நிறுவனத்தினர் சர்வே பணிகளை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து பல்வேறு ஆய்வு பணிகள் சில மாதங்களாக நடந்தது. ஹரியானா ஆர்.ஐ.டி.இ.எஸ்., நிறுவனம் ரோப் கார் அமைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர். இதற்காக ஆகஸ்ட் மாதம் அவர்கள் ரோப்கார் அமைய உள்ள இடங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். பணிகள் முடித்த மறுதினம் ரோப்கார் அமைப்பதற்காக அந்நிறுவனமும், கோயில் நிர்வாகமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்த பேப்பர்கள் கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது.
சர்வே பணிகள் துவக்கம்: பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகளை அடுத்து இறுதி கட்டமாக இன்று சர்வே பணிகள் துவக்கப்பட்டது. மூன்று நாட்கள் இப்பணிகள் நடக்க உள்ளது. ஆர்.ஐ.டி.இ.எஸ்., பொது மேலாளர் சதீஷ்குமார் வர்மா தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் திருப்பரங்குன்றத்தில் மலை மேல் செல்லும் புதிய படிக்கட்டுகளின் அருகே ரோப்கார் அமைவுள்ள இடம், உயரம், இரும்பு கம்பிகள், ரோப்கார் செல்லும் நேரம், திரும்பும் நேரம், இடத்தின் அளவு, ஆரம்பிக்கும் இடம் மலை மேல் இறங்கும் இடம் உள்பட அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்தும் சர்வே பணிகளை துவக்கினர். இப்பணிகள் நிறைவடைந்த பின்பு, இந்நிறுவனம் திட்ட மதிப்பீடு தயாரித்து வழங்கும். அதன் பின்பு சில வாரங்களில் ரோப்கார் அமைக்கும் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களது பல ஆண்டு கோரிக்கை நிறைவேற உள்ளது.