பதிவு செய்த நாள்
26
நவ
2012
10:11
பெரம்பலூர்: எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் வரும், 27ம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது என, மகா சித்தர்கள் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ராஜ்குமார் குருஜி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில், ஆண்டு தோறும் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும், 27ம் தேதி மாலை, 6 மணியளவில் கார்த்திகை திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீபத்திருவிழாவை முன்னிட்டு, 27ம் தேதி காலை, 6 மணியளவில் கோபூஜை, காலை, 7 மணிக்கு, 210 சித்தர்கள் யாகம் ஆகியன நடக்கிறது. இதைத்தொடர்ந்து மதியம், 12 மணிக்கு மீட்டர் திரியை கோமாதா மேல் வைத்து பூஜையும், 210 சித்தர்கள் யாகமும் செய்து மலைக்கு மேல் கொண்டு செல்லும் நிகழ்ச்சியும், மாலை, 6 மணிக்கு மகா தீபம் பிரம்மரிஷி மலையின் மீது ஏற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடக்கிறது. வாண வேடிக்கையும், மலையடிவாரத்தில் வரும் பக்தர்களுக்கு அன்னதானமும், சாதுகளுக்கு வஸ்திரதானமும் வழங்கப்படும். கார்த்திகை தீப திருவிழாவில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.