தேவகோட்டை; ஐப்பசி முதல் தேதியும், கடைசி நாளும் தேவகோட்டையில் உள்ள சுவாமிகள் மணிமுத்தாறில் தீர்த்தவாரி செய்வது வழக்கம். அதன் படி ஐப்பசி கடைசி நாளான நேற்று சுவாமிகள் மதியம் மணிமுத்தாறில் எழுந்தருளி கடைமுழுக்கு தீர்த்தவாரி செய்தனர். தேவகோட்டையில் உள்ள சிலம்பணி சிதம்பர விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், கோதண்டராமர் ஸ்வாமி, ரங்கநாத பெருமாள், கைலாசநாதர், கிருஷ்ணர், கைலாச விநாயகர், மந்திரமூர்த்தி விநாயகர் மற்றும் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் மணிமுத்தாறில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து சுவாமிகளின் அட்சரத்தேவர்கள், சக்கரத்தாழ்வார்கள், ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்று சுவாமிகளுடன் சேர்த்து அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தன. தீர்த்தவாரி செய்த போது மழை கொட்டியது. சுவாமிகள், மழையில் நனைந்தன. பக்தர்கள் மழையில் நனைந்தபடியே சுவாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரி முடிந்தும் மழையில் நனைந்தபடியே சுவாமிகள் முக்கிய வீதிகள் வழியாக கோவில்களுக்கு திரும்பினர்.