பதிவு செய்த நாள்
17
நவ
2024
06:11
பொள்ளாச்சி; ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை அமைக்க, முகூர்த்தக்கால் நடப்பட்டது.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில், பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிஷேகம், டிச., 12ல் நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கோவில் கோபுரங்கள் புனரமைக்கப்பட்டும், வர்ணம் பூசியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல, விழாவில், 4 லட்சத்தும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுவதால், தேவையான அடிப்படை வசதிகள் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா, இன்று காலை, 9:30 மணிக்கு துவங்கியது. முன்னதாக, சிறப்பு வேள்வி வழிபாடுகளை தொடர்ந்து, கம்பம் எடுத்து வந்து, ஈசானிய மூலையில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஒன்பது குண்டங்கள் அமைக்கப்படவும் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.