பதிவு செய்த நாள்
18
நவ
2024
10:11
விழுப்புரம்; விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன் மற்றும் சக்திவேல் குழுவினர், விழுப்புரம் அடுத்த கண்டமானடி, அரசு ஊழியர் நகரையொட்டியுள்ள பகுதியில், கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது கி.பி., 7ம் நுாற்றாண்டு பல்லவர் காலத்தை சேர்ந்த மூத்ததேவி சிற்பம் இருப்பதை கண்டெடுத்தனர்.
அவர்கள் கூறியதாவது: இப்பகுதியில் ஒரு பலகை கல்லில், அலங்காரத்துடன் வடிக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தில், மூத்ததேவி, கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் உள்ளார். காதுகள், கழுத்து, கைகளில் பழங்கால ஆபரணங்கள் அணி செய்கின்றன. மூத்த தேவியின் வலது கை, தாமரை மொட்டினை ஏந்தியுள்ளது. இடது கை செல்வக் குடத்தின் மீது வைத்த நிலையில் காணப்படுகிறது. சிற்பத்தில், மூத்த தேவியின் மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோர் நின்ற நிலையில் உள்ளனர். ஆனால், வழக்கமாக இடம்பெறும் காக்கைக் கொடி, இந்த சிற்பத்தில் இடம் பெறவில்லை. ஜேஷ்டா என்று வடமொழியில் அழைக்கப்படும், மூத்ததேவி வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது. விழுப்புரம் மாவட்டத்தில், பிடாகம், நன்னாடு, செல்லபிராட்டி உள்ளிட்ட இடங்களில், இதுபோன்ற மூத்ததேவியின் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வகையில், கண்டமானடி கிராமத்தில் தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த சிற்பமும், வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிற்பத்தை, உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.