பதிவு செய்த நாள்
27
நவ
2012
10:11
ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில்களில், கார்த்திகை மாத சோமாவாரம் முன்னிட்டு, 108 சங்கு அபிஷேக சிறப்பு பூஜைகள் நடந்தது. தமிழ் மாதமான, கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான், "அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆத்தூர் பகுதியில், பழமை வாய்ந்த கோட்டை காயநிர்மலேஸ்வரர், தலைவாசல் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில்கள் உள்ளது. இக்கோவிலில், நேற்று, கார்த்திகை மாதம், இரண்டாவது சோமவார நாளில், "சங்காபிஷேக பூஜைகள் நடந்தது. அதையொட்டி, சிவபெருமானை குளிர்விக்கவும், உலக நன்மை வேண்டியும், காலை, 7 மணி முதல், 8 மணி வரை, யாகசால பூஜை நடந்தது. காலை, 9 மணியளவில், 108 வலம்புரி சங்குகள் கொண்டு சங்காபிஷேகம் நடந்தது. பூஜையில், சேலம், ஆத்தூர், தலைவாசல், நரசிங்கபுரம், வாழப்பாடி, கெங்கவல்லி, சின்னசேலம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.