பதிவு செய்த நாள்
27
நவ
2012
10:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மீது நவ., 27 மாலை 6.15 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.இங்குள்ள கோயிலில், கார்த்திகை 8வது நாளையொட்டி பட்டாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு சுப்ரமணியசுவாமி, தெய்வானை கோயில் ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினர். தங்ககுடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜைகள் முடிந்து, ரத்ன கிரீடத்திற்கு புனிதநீர் அபிஷேகம் நடந்தது. கோவர்த்தனாம்பிகையிடம் பெறப்பட்ட நவரத்தின செங்கோல், சண்முகசுந்தரம் சிவாச்சார்யாரிடம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. செங்கோலுடன் சிவாச்சார்யார் ஆஸ்தான மண்படத்தை வலம் வந்து, சுவாமியின் சிரசில் கிரீடம், கரங்களில் செங்கோல், சேவல் கொடியை சேர்ப்பித்தார். இரவு தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார்.
மகா தீபம்: இன்று காலை 11 மணிக்கு 16 கால் மண்டபம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி, ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது.மாலை ஆறு மணிக்கு கோயிலுக்குள் பாலதீபம், 6.15 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இன்று மட்டும் மலை மீது மக்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.