பதிவு செய்த நாள்
19
நவ
2024
12:11
மடிகேரி இயற்கை வளங்கள் நிறைந்த, சொர்க்க பூமி என்பது அனைவரும் அறிந்ததே. பசுமை படர்ந்த மலைகள், நீர்வீழ்ச்சிகள், வனங்கள் மட்டுமல்ல, மடிகேரியில் புராதன பிரசித்தி பெற்ற வனதேவதை கோவில்களும் உள்ளன. இவை அவ்வளவாக வெளிச்சத்துக்கு வரவில்லை. இன்றைக்கும் கிராமப்புறங்களில், வனப்பகுதிகளில் உள்ள கடவுள்களை வணங்குகின்றனர். கடவுள்களுக்கு தனி காடு ஒதுக்கப்பட்டுள்ளது. இக்காடுகள், 6,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்டது. காடுகளில் கோவில்கள் கட்டி வழிபடுகின்றனர். இவற்றில் வன பத்ரகாளேஸ்வரி கோவில் பிரசித்தி பெற்றது.
காவல் தெய்வம்: மடிகேரியின், கோணிகொப்பா சாலையில் செல்லும்போது, வழியில் ஹாத்துாத் கொளத்தோடு பைகூடு கிராமத்தில் வன பத்ரகாளேஸ்வரி கோவில் உள்ளது. தினமும் இந்த வழியாக செல்வோர், வன பத்ரகாளேஸ்வரியை வணங்கிய பின்னரே, முன்னோக்கி செல்வர். ஹாதுார் கிராமத்தின் வனத்தில் வசித்த மக்களுக்கு, வன பத்ரகாளி காவலாக நிற்பதாக ஐதீகம். மாதந்தோறும் அமாவாசை நாளன்று, வனபத்ர காளேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோலாகலமாக திருவிழா நடக்கிறது. கோவிலுக்கு 500 ஆண்டுகள் வரலாறு உள்ளது. முன்னொரு காலத்தில், இங்குள்ள அடர்ந்த வனத்தின், ஒரு பகுதியில் நெல் வயல் இருந்தது. ஒருநாள் பெண் ஒருவர் வயலில் அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது தங்க நிறத்தில் கொக்கு ஒன்றை காண்கிறார். பொதுவாக கொக்கு, வெண்மை நிறத்தில் இருக்கும். ஆனால், இந்த கொக்கு தங்க நிறத்தில் மின்னியது. ஆச்சரியமடைந்த அப்பெண், இந்த விஷயத்தை கிராமத்தினரிடம் கூறுகிறார். கிராமத்தினரும் அந்த கொக்கை பிடித்து, கூடையில் அடைத்து வைக்க நினைத்து, அதை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் கொக்கு யாருடைய கையிலும் சிக்காமல், வன பத்ரகாளி குடிகொண்டுள்ள காட்டில் மாயமாய் மறைந்தது. அப்போதுதான் கொக்கு அவதாரத்தில் இருந்தது வன பத்ரகாளி என்பது, மக்களுக்கு புரிந்தது. தங்கள் கஷ்டத்தை போக்க வந்துள்ளதாக நம்பினர். அனைவரும் சேர்ந்து காட்டில் கோவில் கட்டி, வன பத்ரகாளி சிலையை பிரதிஷ்டை செய்து, வழிபட துவங்கினர். அன்று காட்டின் நடுவில் குடிகொண்ட வன பத்ரகாளி, இன்று வன பத்ரகாளேஸ்வரியாக வணங்கப்படுகிறார்.
பயண பாதுகாப்பு; அடர்ந்த காட்டின் நடுவே, கோவில் அமைந்துள்ளது. சாலையை ஒட்டியபடி, கோவில் நுழைவு வாசல் உள்ளது. இந்த வழியாக செல்வோர், வாகனத்தை நிறுத்தி தங்கள் பயணத்தில் எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது என, பிரார்த்தனை செய்து, பயணத்தை தொடர்கின்றனர். மடிகேரியில் மட்டுமின்றி, குடகின் அனைத்து காட்டுப்பகுதியிலும் வன பத்ரகாளி கோவில்கள் உள்ளன. ஆண்டாண்டு காலமாக பக்தர்களை காப்பாற்றுகிறார். அமைதியான, இயற்கை எழில் மிகுந்த இடத்தில் கோவில் அமைந்துள்ளதால், பக்தர்கள், சுற்றுலா பயணியர் தேடி சென்று தரிசிக்கின்றனர்.
குடகின், கோணிகொப்பலு அருகில், ஹாத்துார் கிராமத்தில் உள்ளது. கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் இருந்து, கோணிகொப்பலுவுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயில் வசதி, தனியார் வாகன வசதியும் உள்ளது.