கார்த்திகை முதல் சோமவாரம்; குற்றாலத்தில் பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19நவ 2024 03:11
குற்றாலம்; கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு குற்றாலத்தில் நாகர் சிலைகளுக்கு பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் தமிழகம் முழுவதும் சோமவாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பெண்கள் தங்களின் மாங்கல்ய பலத்திற்காகவும் மற்றும் வேண்டுதல்களை நிறைவேற்றவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வர். தென்காசி மாவட்டத்தில் தென்பொதிகை மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் ஆன்மிக ஸ்தலமாக சிறந்து விளங்கும் குற்றாலத்தில் ஆயிரக்கணக்கில் பெண்கள் வந்து வழிபட்டு செல்வர். கார்த்திகை முதல் திங்கள்கிழமை சோமவார நாளான நேற்று குற்றாலம் வந்த பெண்கள் தங்களின் மாங்கல்ய பலத்திற்காகவும், நாட்டில் வறுமை நீங்கி, மழை பெய்திடவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் அருகேயுள்ள செண்பகவிநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். சோமவாரத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை பெண்கள் குற்றாலம் வந்து அருவிகளில் நீராடினர். மெயின் அருவியில் கடந்த 3 நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் பெண்கள் புலி அருவிக்கு சென்று குளித்தனர். பின்னர் செண்பக விநாயகர் கோயிலில் பூ, பழம், மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட்டனர். கோயில் பின்புறமுள்ள நாகர் சிலைகளையும் வழிபட்டனர். மெயின் அருவியில் குளிக்க அனுமதி இல்லாததால் கூட்டம் சுமாராக இருந்தது.