பதிவு செய்த நாள்
27
நவ
2012
10:11
ராசிபுரம்: துலுக்க சூடாமணியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டி, யாதவர் தெருவில் துலுக்க சூடாமணியம்மன், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. செல்வவிநாயகர், பாலமுருகன் ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதி, பலி பீடம், நாகர் ஆகிய விக்ரஹங்களும் அமைக்கப்பட்டது. திருப்பணி அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று, கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், காவிரி தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, விநாயகர் பூஜை, புண்யாக வாசனை, வாஸ்து சாந்தியும், இரவு அஷ்டபந்தனம் மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று அதிகாலை, 4 மணிக்கு நாடி சந்தானம், இரண்டாம் காலயாக பூஜை, மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடும், காலை, 6 மணிக்கு விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகமும், தொடர்ந்து, விநாயகர், துலுக்க சூடாமணியம்மன் மூலவர், பாலமுருகன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிகேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள், ஸ்வாமி தரிசனம் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்திருந்தனர்.