பள்ளிப்பட்டு; பள்ளிப்பட்டு ஒன்றியம், கொளத்துார் அடுத்த விஜயராகவபுரம் கிராமத்தின் கிழக்கில், கொசஸ்தலை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது திருமாலீஸ்வரர் கோவில். பழமையான இந்த கோவிலின் முன்பாக 21 அடி உயரத்தில் கல்லால் வடிவமைக்கப்பட்ட கொடிமரம் அமைந்துஉள்ளது. கொடிமரத்தை ஒட்டி கோவில் புஷ்கரணியும் உள்ளது. பழமையான இந்த கோவிலுக்கு, கொசஸ்தலை ஆற்றின் மறுகரையில் உள்ள மேலப்பூடி மற்றும் சொரக்காய்பேட்டை கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஆற்றை கடந்து வந்து தரிசனம் செய்து வருகின்றனர். நித்திய வழிபாடுகளுடன் சிவராத்திரி, ஆருத்ரா உள்ளிட்ட வைபவங்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த கோவிலின் மேற்கில் விஜயராகவபெருமாள் கோவிலும் அமைந்துள்ளது. இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் தற்போது முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தவும் பக்தர்கள் திட்டமிட்டுள்ளனர்.