17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜன., 2026ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2024 11:11
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 2009ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகமவிதி. இதன்படி 2021ல் நடந்திருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்.2ல் கோவிலின் வீரவசந்தரராயர் மண்டபம் தீ விபத்தில் முற்றிலும் சிதைந்தது.
சீரமைப்பு பணிக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும் நிர்வாக காரணங்களால் தாமதமாக பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து இதர திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது என்பதாலேயே 2021ல் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், சட்டசபையில் 2 ஆண்டுகளுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதன்பிறகு திருப்பணிகள் வேகம் எடுத்தன. 4 கோபுர பணிகள் ஸ்பான்சர்கள் மூலம் நடந்து வருகின்றன. இதை தவிர்த்து இதர திருப்பணிகளுக்கு ரூ.25 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிக்கும் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கிறது. முதல்வர் அறிவித்தபடி நடத்த வேண்டும் என்பதாலும், சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானால் பணிகள் தடைபடும் என்பதாலும் 2026 ஜன.26ல் கும்பாபிஷேகம் நடத்துவதென அறநிலையத்துறை நாள் குறித்துள்ளது. அதற்குள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்திற்கு, அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.