பதிவு செய்த நாள்
28
நவ
2012
10:11
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு லட்ச தீப வழிபாடு நடக்கிறது. இங்கு ஸ்ரீதேவி,பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். திண்டுக்கல்லில் இருந்து 10 கி.மீ., தொலைவில் இக் கோயில் உள்ளது."தாட்டி கும்புலு என்று தெலுங்கில் அழைக்கப்பட்டு தாடிக்கொம்பு ஆனது. "தாட்டி என்றால் பனை, "கும்புலு என்றால் கூட்டம். 14 ம் நூற்றாண்டில், அச்சுத தேவராயரால் கட்டப்பட்டது. இங்கு 14 மூர்த்திகளுக்கு தனித்தனி சன்னதி உள்ளது. கல்யாண சவுந்தரவள்ளி தாயார் சன்னதியின் முன் மகா மண்டபத்தில், 11 அடி உயர தூண்களில், 14 சிற்பங்கள் உள்ளன. 16 கரங்கள் கொண்ட சக்ரத்தாழ்வார் சிற்பம் உள்ளன.
திருமணத் தடை போக்கும் ரதி-மன்மதன் சிற்பம் உள்ளது. கல்விக்கடவுள்கள் ஹயக்கிரீவர், சரஸ்வதி ஒரே சன்னதியில் இருப்பது சிறப்பு. கல்யாண சவுந்தரவள்ளி தாயார் சன்னதி, நோயற்ற வாழ்வை தரும் தன்வந்திரி, லட்சுமி நரசிம்மர், ஆண்டாள் சன்னதி, வேணு கோபால சுவாமி, ஆஞ்சநேயர், திருக்கோயில் பாதுகாவலராக சொர்ண ஆகர்ஷண பைரவர், விஷ்வக்சேனரும் உள்ளனர். தலவிருட்சமாக "வில்வ மரம் உள்ளது. வெளிபிரகாரத்தில் ப மபத மண்டபம், வாகன மண்டபம், தீபத்தூண் உள்ளது. கோயிலுக்கு வந்தால், இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். சுவாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தீபத்தூணில் பெரிய தீபம் இன்று ஏற்றப்படுகிறது. அதன்பின் சுவாமி,வீதியுலா வருகிறார். இரவு 7 மணிக்கு வாண வேடிக்கை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.