பதிவு செய்த நாள்
28
நவ
2012
10:11
மணிமங்கலம்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான மணிமங்கலம், கயிலாய நாதர் திருக்கோவில், புதுப்பிக்கப்பட்டு, வரும், 30ம் தேதி கும்பாபிஷேகம் காண உள்ளது. தாம்பரத்தை அடுத்த, மணிமங்கலம் கிராமத்தில் ஞானாம்பிகை உடனுறை கயிலாயநாதர் திருக்கோவில் உள்ளது. விஜயாலய சோழனால், 1250 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவில், கடந்த பல ஆண்டுகளாக, முறையான பராமரிப்பில்லாமல், சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. கோவிலை சீரமைக்க திருப்பணி குழு அமைக்கப்பட்டது. நன்கொடையாளர்கள் உதவியுடன் திருப்பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தன. பழைய கோவிலில் இருந்த, கருங்கற்கள் சிதிலமடையாமல், பெயர்த்து எடுக்கப்பட்டிருந்தன.அவற்றைக் கொண்டு, முன், கோவில் எந்த அமைப்பில் இருந்ததோ, அப்படியே தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.அம்மனுக்கும், முருகனுக்கும், தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. நந்திக்கு மண்டபம், பலி பீடம், நவகிரக சன்னிதிகள், புதிதாக அமைந்துள்ளன. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், வரும், 30ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
கணபதி ஹோமத்துடன், விழா, நேற்று முன்தினம் துவங்கியது. கணபதி ஹோமம் முடிந்த பிறகு, யாகசாலை பூஜைகள் துவங்கியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர். இதுகுறித்து, திருப்பணிக் குழுவை சேர்ந்த விஸ்வநாத சுவாமிகள் கூறியதாவது:கயிலாயநாதர் கோவிலின் விநாயகர் சன்னிதி, 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு சிவன் சன்னிதி புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்பட்டன.பழைய கற்களை கொண்டு, பழமை மாறாமல் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தனி சன்னிதிகளுக்கு மட்டும் வேறு கற்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.