பதிவு செய்த நாள்
28
நவ
2012
10:11
பள்ளிப்பட்டு: கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, பூவராக சுவாமி கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி, சிறப்பாக நடந்தது.பள்ளிப்பட்டு அடுத்த, மேல்பொதட்டூர்பேட்டையில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பூவராக சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் புலரமைக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன், மகா கும்பாபிஷேகம் நடந்தது.இக்கோவிலில், ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும், சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கார்த்திகை மாத பவுர்ணமி தினமான நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, புஷ்ப அலங்காரத்துடன் ஆராதனைகள் நடந்தது.காலை, 10:00 மணிக்கு உற்சவர் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், தொடர்ந்து சேஷ வாகனத்தில் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு, ருத்ர யாகம் மற்றும் திரு விளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவிலின் துஜஸ்தம்பம் அருகே, மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் பொதட்டூர்பேட்டை, காக்களூர், புதூர், சவுட்டூர், மேல் பொதட்டூர் மற்றும் சுற்றியுள்ள, கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.