பதிவு செய்த நாள்
28
நவ
2024
03:11
சென்னை; புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானின் அருளைப் பெற்றனர்.
சென்னை புரசைவாக்கத்தில், 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பங்கஜாம்பாள் சமேத கங்காதரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 2008ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திருப்பணி நடந்து, 16 ஆண்டுகள் ஆகிவிட்டதால், திருப்பணிகளை செய்து, கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி, கோவில் நிதி மற்றும் உபயதாரர் நிதி, 4.82 கோடி ரூபாயில், 36 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை மாநகராட்சி சார்பில், 1.29 கோடி ரூபாயில் திருக்குளம் சீரமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு, 6 கோடி ரூபாயில் புதிய தங்கத்தேர் செய்ய பணிகள் நடந்து வருகிறது. தற்போது, திருப்பணி முடிந்த நிலையில், நேற்று மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதையொட்டி, கடந்த, 24ம் தேதி முதல் யாகசாலை வளர்க்கப்பட்டு, கோபூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாசாலை பூஜைகள், பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. கும்பாபிஷேக நாளான இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து அவப்ருத யாகம், யாத்ரா தானம், மகா பூர்ணாஹூதி, கடப்புறப்பாடு நடந்தது., ராஜகோபுரம், விமான கலசங்களுக்கு கும்ப நீர் சேர்க்கப்பட்டது. பின், பங்கஜாம்பாள் சமேத கங்காதரேஸ்வரர், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பநீர் சேர்த்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானின் அருளைப் பெற்றனர். இந்நிகழ்வில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன், அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.