பதிவு செய்த நாள்
29
நவ
2024
10:11
திருவாலங்காடு; திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத தெப்பத் திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று, கார்த்திகை மாதம், சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி, தெப்பத் திருவிழா நடந்தது. விழாவை ஒட்டி, காலை 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. தொடர்ந்து, மாலை 7:00 மணிக்கு கோவிலின் பின்புறம் உள்ள ஆலங்காட்டீசர் சென்றாடு தீர்த்த குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் வண்டார் குழலியம்மன் உடனுறை வடாரண்யேஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவ பெருமான் மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், மோகனன், திருவாலங்காடு ஒன்றிய சேர்மன் ஜீவா விஜயராகவன் ஊராட்சி தலைவர் ரமேஷ் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.