புரட்டி போட்ட மழை, புயல் சின்னம்; அன்றே பஞ்சாங்கத்தில் கணித்து சொல்லியுள்ளது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2024 11:12
தேவகோட்டை; பெஞ்சல் புயல் தமிழகத்தில் மட்டுமின்றி புதுச்சேரியை புரட்டி போட்டு விட்டது. இந்த புயலை பொறுத்தமட்டில் பலரையும் போக்கு காட்டி நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை கரையை கடந்தது. ஆனால் புயல் நகராமல் பாண்டிச்சேரியில் சுமார் 8 மணி நேரம் நிலை கொண்டு பாண்டிச்சேரி, விழுப்புரம் பகுதியையே வெள்ளக் காடாக்கியது. இந்த மாதம் புயல் உருவாகி பாண்டிச்சேரியை நிலை கொள்ளும் என்று அன்றே பஞ்சாங்கம் கணித்து சொல்லியுள்ளது. லாவண்யா பதிப்பகம் ஆற்காடு வாக்கிய பஞ்சாங்கத்தில் 43 வது பக்கத்தில் இந்தாண்டு இந்த மாதத்திற்கான பஞ்சாங்க குறிப்பு உள்ளது. அதில் அயல்நாடுகளில் சூறாவளி காற்று, பாண்டிச்சேரி கிழக்கே புயல் சின்னம், சிதம்பரத்திற்கு கிழக்கே புயல் சின்னம் என குறிப்பிட்டுள்ளது. கடல் உள் வாங்கும். தமிழ்நாட்டில் சூறாவளி காற்றுடன் மழை, அனைத்து ஆறுகளில் வெள்ளம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பெஞ்சல் புயலை பொறுத்தவரை பஞ்சாங்கத்தில் சொல்லியபடி புயல் பாண்டிச்சேரியில் கரை கடந்தது மட்டுமின்றி அங்கேயே நின்று புதுச்சேரியை வெள்ளத்தில் தவிக்கவிட்டது. அயல் நாடான இலங்கை, அமெரிக்காவில் காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதில் சிலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று மட்டும் சுமார் 20 ஆறுகளுக்கு மேல் வெள்ளம் ஓடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் கணித்து பஞ்சாங்கம் சொன்னது பாண்டிச்சேரி தவிக்குது என ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.