பதிவு செய்த நாள்
03
டிச
2024
10:12
கார்த்திகை மாதத்தில் அமாவாசைக்கு இரண்டாவது நாள்தான் துவிதியை திதி. இந்த நன்னாளில் மஞ்சளால் அம்பிகையை பிரதிமையாகச் செய்து, விரதம் இருந்து பூஜை செய்தாள் ரம்பை. இந்த விரத பூஜைக்கு (திந்திரிணி- மஞ்சள்) கௌரிவிரதம் என்றும் பெயர் ஏற்பட்டது. ரம்பை இப்பூஜை செய்தே கார்த்தியாயினி தேவியின் அருள் பெற்றாள்.
ரம்பை, அம்பிகை கவுரி தேவியை வணங்கி விட்டு, கலசத்தில் ஆவாகனம் செய்து மஞ்சளால் பிரதிமை செய்து, அலங்கரித்து முறையாக விரதமிருந்து பூஜை நடத்தினாள். மங்களகரமான பொருட்களோடு மஞ்சளால் சிலை செய்து வழிபட்டதால், இது கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் இரண்டாவது நாள், திந் திரிணீ கவுரி விரதம் எனப்படுகிறது. ரம்பையின் பூஜையில் மகிழ்ந்த கவுரி தேவி, மறுநாள் காலை உதயகாலத்தில் அழகன் முருகனைக் (கார்த்திகேயனை) மடியில் வைத்தபடி கார்த்தியாயினியாகக் காட்சி தந்தாள்.
ரம்பையே. நீ வேண்டும் வரத்தைக் கேட்பாயாக என்றதும், தன் அழகிப் பட்டம் திரும்ப வந்து சேர வேண்டும், அழகுடன் மிளிர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். ரம்பை கேட்டபடியே தேவலோக அழகிப் பட்டம் திரும்பப் பெற்றிட ஆசி வழங்கிய பின், பொன்னும், மணிகளும் அளித்து வசீகரமான முக அழகையும் கொடுத்து வாழ்த்தி விட்டு இன்றுமுதல் இந்தத் திருதியை தினம் ரம்பா திருதியை என்று உன் பெயரால் பெண்கள் கொண்டாடக்கூடிய தங்கத் திருநாளாக ஆகட்டும் என்று அறிவித்தாள். இதுவே ரம்பா திருதியை உருவான திருக்கதை.
வழிபாட்டுப் பலன்கள்: பெண்களுக்கு அழகும் முகவசீகரமும், தங்க நகை சேரும் பாக்கியமும் கிடைக்கும். பரத நாட்டியம், மற்ற ஆடல் கலைகளில் மிளிர்ந்திட, இந்த நாளில் கவுரி பூஜையுடன் ரம்பாதேவி பூஜையும் செய்யவேண்டும். புதிதாக சிறிதளவு நகை வாங்கி பூஜை செய்து அணிபவர்கள், அருகில் உள்ள அம்மன் சன்னதிகளுக்குச் சென்று அம்மன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வீட்டுக்கு வந்து ஆரத்தி செய்த பிறகு அணிதல் வேண்டும். அன்னை கவுரிதேவி காட்சி தந்து ஆசீர்வாதம் செய்த படியால், தாயை வணங்கித் தெய்வமாக வழிபடுவதால் அனைத்தும் கிடைக்கும் என்று இந்த பூஜா விதியில் சொல்லப்பட்டுள்ளது. ஸ்வர்ணாம்பிகா பஞ்சகம் என்ற தங்கம் சேர்க்கும் துதியை படித்து சப்தமுகீ என்னும் ருத்ராட்சத்தை வழிபடுவோருக்கு பொன் பொருள் சேர்கின்ற அதிர்ஷ்டயோகமும் உண்டாகும்.