பதிவு செய்த நாள்
04
டிச
2024
10:12
வடபழனி, ஆண்டவர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகளில், புற்றீசலாக முளைத்து வரும் பல வகையான ஆக்கிரமிப்புகளால், தரிசிக்க வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இப்பிரச்னைக்கு, சென்னை மாநகராட்சி, அறநிலையத்துறை, காவல்துறை ஒருங்கிணைந்து தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்றது நுாற்றாண்டு பழமை வாய்ந்த வடபழனி ஆண்டவர் கோவில். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். செவ்வாய், வார விடுமுறை, விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதுடன், நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகை மாதம் என்பதால், அதிகாலை முதல் இரவு வரை, ஏராளமான அய்யப்ப பக்தர்கள் குடும்பத்துடன் வடபழனி ஆண்டவரை தரிசித்து செல்கின்றனர். இதனால், செவ்வாய் கிழமையான நேற்று, வழக்கத்திற்கு மாறாக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர்.
ஆற்காடு சாலையில் இருந்து, கோவில் முகப்பிற்கு செல்லும் பிரதான சாலையாக ஆண்டவர் தெரு உள்ளது. இந்த தெருவின் இருபுறமுள்ள கடைகளால், நடைபாதை மற்றும் சாலையை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. அங்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால், கோவில் நுழைவாயிலை பக்தர்கள் அடைய மிகவும் சிரமப்படுகின்றனர். பக்தர்களை இறக்கிவிடும் ஆட்டோக்களும், உடனடியாக செல்லாமல் அடுத்த சவாரி வரும் வரை காத்திருப்பதாலும் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், மாடவீதிகளிலும் நடைபாதை கடைகள், வாகனங்களின் ஆக்கிரமிப்பால், பக்தர்கள் நடந்து செல்லவே சிரமப்பட்டனர். மனக்குறையை போக்க வரும் பக்தர்கள், கோவிலுக்குள் நுழைந்து, வெளியே செல்வதற்குள், பல்வேறு இன்னல்களையும் அனுபவித்து, மனச்சுமையுடன் திரும்புகின்றனர். எனவே, சென்னை மாநகராட்சி, அறநிலையத்துறை, போக்குவரத்து போலீசார், காவல்துறை, கோவில் நிர்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்து, ஆய்வு நடத்தி பக்தர்களுக்கு ஏற்படும் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வலுத்துள்ளது. - நமது நிருபர் -