பதிவு செய்த நாள்
05
டிச
2024
05:12
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வசந்த மண்டபம் பணிக்காக அகற்றப்பட்ட கொடிமரம் மற்றும் தீபத்தூண் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனையடுத்து, பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவிலின் முன்புறம் கொடிமரம் மற்றும் தீபத்தூண் இருந்த பகுதியில், அமைக்கப்பட்டு இருந்த தகர கொட்டகை சேதம் அடையத் துவங்கியதால், ஆர்.சி.சி., வசந்த மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. இதனையடுத்து, உபயதாரர் மூலம், 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மண்டபம் கட்டும் பணி துவங்கிய போது, அங்கிருந்த கொடிமரம் மற்றும் தீபத்தூண் அகற்றப்பட்டது. வசந்த மண்டபத்தின், அஸ்திவார பணிகள் நிறைவடைந்துள்ளது. அப்போது, கார்த்திகை தீபத்திருநாள் நெருங்கி உள்ளதால், கார்த்திகை தீபத்திருநாள் அன்று விளக்கேற்றுவதற்காக, 40 அடி உயரமுள்ள கொடிமரம் மற்றும் தீபத்தூண் மீண்டும் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொடிமரம் பிரதிஷ்டை செய்யும்போது, வானில் கருடன் வட்டமிட்டதை கண்ட பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர். அதோடு, பஞ்சமுக விநாயகர் சிலை அருகே இருக்கும் மரம், கடந்த சில நாட்களுக்கு முன் சாய்ந்தது. இதனால், அம்மரத்தை பலப்படுத்தவும், பஞ்சமுக விநாயகருக்கு மேடை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதால், அப்பணிகளுக்காக, பஞ்சமுக விநாயகர் சிலைக்கு பாலாலையும் செய்யப்பட்டது. இதில், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.