பதிவு செய்த நாள்
05
டிச
2024
05:12
கூவத்துார்; கூவத்துார் அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம், இன்று கோலாகலமாக நடைபெற்றது. கல்பாக்கம் அடுத்த கூவத்துாரில், நுாற்றாண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவில், விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. மூலவர் அங்காள பரமேஸ்வரி, விநாயகர், பாலமுருகர், துர்க்கை, மதுரை வீரன், பாவாடைராயன், சப்த கன்னியர் ஆகிய சுவாமியர் வீற்றுள்ளனர். ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ், மாமல்லபுரத்தில் இயங்கும் ஆளவந்தார் அறக்கட்டளை, இக்கோவிலை நிர்வகிக்கிறது. கடந்த 2008ல் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 15 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, உபயதாரர் கோதண்டராமன் வாயிலாக, நுழைவாயிலில் முதல் முறையாக மூன்று நிலை ராஜகோபுரம் அமைத்து, மூலவர் சன்னிதி புனரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள் நடந்ததன. இன்று காலை, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 2ம் தேதி, கணபதி பூஜை, புண்யாஹவாசன், வாஸ்து சாந்தி உள்ளிட்ட சடங்குகள் துவக்கப்பட்டன. இன்று காலை, 6:00 மணிக்கு, ராஜகோபுர தச தரிசன பூஜைகள், நான்காம் கால யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, 8:20 மணிக்கு ராஜகோபுரத்திலும், 8:40 மணிக்கு விநாயகர், அங்காள பரமேஸ்வரி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீரூற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கூவத்துார் மற்றும் சுற்றுப்புற பக்தர்கள் திரண்டு, அம்மனை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை, மஹா அபிஷேகம் கண்ட அம்மன், பின்னர் வீதியுலா சென்றார்.
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றம் ருத்திரான் கோவில் பகுதியில், வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு முன்பே உருவான ருத்திர கோடீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், இறை உருவங்களுடன் சுற்றுச்சுவர், குள படித்துறை வாயில் கோபுரம் ஆகியவை அமைக்கப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகமும், நேற்று காலை விமரிசையாக நடந்தது.