அவிநாசி; மொக்கணீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது.
அவிநாசி அருகே குட்டகம் ஊராட்சியில் உள்ள கூளேகவுண்டம் புதூர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனமர் மொக்கணீஸ்வரர் சுவாமி கோவிலில் உழவாரப்பணி மற்றும் 108 சங்காபிஷேக வழிபாடு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அவிநாசியில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா காசி யாத்திரை குழு சார்பில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் சிவனடியார்கள் திரளாக பங்கேற்று கோவிலில் சுத்தம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் மீனாட்சியம்மன் மற்றும் மொக்கணீஸ்வரர் ஆவாஹணம் செய்யப்பட்டு 108 சங்கு வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 16 வகை திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்று 108 சங்குகளில் பூஜிக்கப்பட்ட தீர்த்தம் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின் திருமுறை விண்ணப்பம் செய்யப்பட்டது. பக்தர்கள் பாராயணம் செய்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர்,அவிநாசி, சேவூர் வட்டாரத்தை சேர்ந்த திரளான சிவனடியார்கள் பங்கேற்றனர். சங்காபிஷேக பூஜைகளை கோவில் சிவாச்சாரியார் தியாகராஜ சிவம் செய்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்மசாஸ்தா ஸ்ரீ காசி யாத்திரை குழு நிறுவனர் ஆரூர சுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.