காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் கைசிக ஏகாதசி வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2024 01:12
காரமடை; பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் கைசிக ஏகாதசி வைபவம் சிறப்பாக நடைபெற்றது. ஒரு வருடத்தில் வரும் 25 ஏகாதிசிகளில் கார்த்திகை மாத சுக்ல பக்ஷ ஏகாதசி கைசிக ஏகாதசி ஆகும். இந்த ஏகாதிசியில் வைணவ திருத்தலங்களில் மகாவிஷ்ணுவை வழிபடுவது, 25 ஏகாதசிகளில் பெருமாளை தரிசித்த பலன் இந்த ஒரே நாளில் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் அனைத்து வைணவ திருத்தலங்களிலும் கைசிக ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொங்கு நாட்டின் வைணவ தளங்களில் சிறந்து விளங்கும் காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை மூலவர் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து கால சந்தி பூஜை தொடர்ந்து விஸ்வக்ஷேனர் ஆராதனம், புண்யாவசனம், கலச ஆவாஹனம், ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவர் ரங்கநாதர் பெருமாள் ஸ்தபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து வெண்பட்டு உடுத்தி ரங்கநாதர் வெண்பட்டு குடைணயுடன் வெள்ளி சப்பரத்தில் மேள தாளம் முழங்க கோவில் வலம் வந்தார். பின்னர் ஆஸ்தானம் எழுந்தருளிய ரங்கநாதர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிம்மாசனத்தில் அமர்ந்தார். உச்சகால பூஜை தொடர்ந்து வேதபாராயணம் சாற்றுமறை முடிந்து தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவு கைசிகப்புராணம் பெருமாள் முன்பு வாசிக்கப்பபடுகிறது.