பதிவு செய்த நாள்
13
டிச
2024
03:12
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் இன்று காலை கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, சகடையுடன் கூடிய சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ரத வீதிகளில் உலா நிகழ்ச்சி நடந்தது.
கார்த்திகை தீபத் திருவிழாவில் ஒன்பதாம் நாள் அன்று காலையில் 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால், தேர் வலம் வரும் ரத வீதிகளின் சாலைகளில் அதிக ஈரமாக உள்ளது. வேகமாக செல்லும் தேரை நிறுத்துவதற்கும், திருப்பங்களில் தேரை திருப்புவதற்கும் குடில்மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. தேரின் சக்கரங்கள் இரும்பில் இருப்பதால் குடில்கட்டைகள் பயன்படுத்தும் பொழுது தேர் வழுக்கி விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கவும், தேரின் நலன் கருதியும், உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் விக்கிரகங்களின் பாதுகாப்பு நலன் கருதியும், பக்தர்களின் நலம் கருதியும், கோயில் ஸ்தானிகப்பட்டர்களால் கருத்துரு வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அறங்காவலர் குழு தீர்மானத்திற்கு வைக்கப்பட்டு பரிசீலித்து, கோயிலின் ஆகம விதிகளுக்கு உட்பட்டு சகடையுடன் கூடிய சப்பரத்தில் (சப்பரத்தேர்) சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் ரத வீதிகளில் புறப்பாடு செய்யப்பட்டது என கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன் தெரிவித்தார்.