சென்னை; ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சங்கரமடத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில், 44வது கிருஷ்ண விஜயதுர்கா ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுரவுத சுமார்த் வித்வத் மஹா சபை, கடந்த, 13ம் தேதி முதல் நேற்று வரை மூன்று நாட்கள் நடந்தது.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, 200 மாணவர்களுக்கு ருக்வேதம், சுக்ல யஜுர்வேதம், சாமவேதம், அதர்வவேதம் போன்றவற்றில் வெவ்வேறு பிரிவுகளில் தேர்வு வைக்கப்பட்டது. தேர்வில் ஒன்பது பேர் சாமவேதத்திலும், 17 அதர்வவேதத்திலும், பாஞ்சராத்திரத்தில், 37 பேரும், யஜுர்வேத சுமார்த்தத்தில், 72 பேரும் பட்டம் பெற்றனர். அவர்களுக்கு, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பட்டங்கள் வழங்கி பேசியதாவது: ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு கோவில் கட்டப்பட வேண்டும். கோவில் இருக்கும் இடங்களில், தர்மம் தானாகவே பரவுகிறது. உடல், மனம் உறுதியுடன் இருக்க வேண்டும். தியானத்திற்கும் உபவாசத்திற்கும், வலிமையான உடல் அவசியம். தர்ம பாதுகாப்பே தேச பாதுகாப்பு. விவசாயம், பசுமாடு வளர்ப்பு மற்றும் இயற்கையை பாதுகாக்க வேண்டியது மிக அவசியம்.எனவே, ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து துளசிமரங்களை நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப் பில் பங்களிக்க வேண்டும். வேத ரட்சையே தர்ம ரட்சை. இவ்வாறு அருளாசி வழங்கினார்.