பதிவு செய்த நாள்
24
டிச
2024
04:12
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை நாரலப்பள்ளி பஞ்., நலகுண்டலப்பள்ளி அருகே, மாவட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, 3 கால கட்டத்தை சேர்ந்த பாறை ஓவியங்களை கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து, ஓய்வு பெற்ற அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: பொதுவாக, பாறை ஓவியங்களை வரைய பயன்படுத்திய வண்ணம் மற்றும் அவை வெளிப்படுத்தும் கருத்தை, 3 காலகட்டங்களாக பிரிக்கலாம். அவை, செஞ்சாந்து புதிய கற்காலத்தையும், வெண்சாந்து பெருங்கற்படைக்காலம் மற்றும் வரலாற்று காலம் எனவும் வகைப்படுத்துவர். கண்டறியப்பட்ட இந்த பாறை ஓவியங்கள், மூன்று கால கட்டத்திலும் வரையப்பட்டுள்ளன. செங்குத்து பரப்பிலுள்ள, 2 மனித உருவங்களில், ஒன்று செஞ்சாந்திலும், மற்றது வெண்சாந்திலும் இறந்தவரின் நினைவாக வரையப்பட்டுள்ளது. இந்த மரபே பின்னாளில் நடுகல்லானது. கூரை பரப்பில் அலங்கரிக்கப்பட்ட சாய்ந்த பாண்டில் விளக்கு, ஆரத்துடன் கூடிய இரண்டு சக்கரங்கள், 4 இதழ் பூக்கோலம், 2 வரிசைகளில் தலா, 3 ‘ப’ வடிவ குறியீடுகள் வரைந்து, அவற்றை சுற்றி புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை, வரலாற்று கால மக்களின் வாழ்வியலை குறிக்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார். ஆய்வில், மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், நலகுண்டலப்பள்ளி அன்பழகன், பாலாஜி, குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.