பதிவு செய்த நாள்
24
டிச
2024
03:12
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோவிலில், மண்டல மகோற்சவம் விழாவை முன்னிட்டு, ஐயப்பன் சுவாமி ஊர்வலம் நடந்தது.
மேட்டுப்பாளையம் சிவன்புரத்தில், ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐயப்ப சேவா சமிதியின் சார்பில், ஆண்டு விழாவும், மண்டல மகோற்சவ விழாவும் நடைபெறும். இந்த ஆண்டு மண்டல மகோற்சவச் விழா கடந்த, 18ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று இரவு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, ஐயப்பன் சுவாமி ஊர்வலம் நடந்தது. கோவை மாவட்ட ஹிந்து முன்னணி செயலாளர் சதீஷ்குமார், சுவாமி ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பெண்கள் தீபம் ஏற்றி, ஊர்வலத்தில் முதலில் சென்றனர். அதைத் தொடர்ந்து செண்டை மேளம் அடித்துச் சென்றனர். அதன் பின்பு ஐயப்ப சுவாமியின் சப்பரம் சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு பள்ளி வேட்டை நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கோவை யாழினி இசைக் குழுவினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சமிதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.