பதிவு செய்த நாள்
27
டிச
2024
11:12
மதுரை; ஸ்ரீ ஆப்தன் சபா, சுவாசநேசி யோகா மையம், ஸ்ரீ சாய் விருக் ஷா அறக்கட்டளை சார்பில் 11வது ஆண்டாக மதுரையில் சபரிமலை தரிசனம் நிகழ்வு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் நடந்தது.
மதுரை காமராஜர் சாலை பிள்ளையார் கோயிலில் இருந்து மண்டபம் வரை 4 முதல் 9 வயது குழந்தைகள் 18 பேர் இருமுடி சுமந்து வந்தனர். 18 பெண்கள் கலசம் ஏந்தியும் 20 பெண்கள் கையில் விளக்கேந்தி வர சுவாமி ஐயப்பனை ஆண்கள் பூப்பல்லக்கில் சுமந்து மண்டபம் வந்தடைந்தனர். அங்கு 20 வகையான அபிஷேகத்தை பெண்கள் நடத்தினர். ஹரிஹரன் சுவாமி பூஜைகளை செய்தார். புஷ்பாஞ்சலி, படிப்பாட்டு முடிந்து எல்லோரும் ஐயப்பன் பாதத்தில் பூத்துாவினர். பூஜிக்கப்பட்ட சுவாமி ஐயப்பன் படம், லட்டு, ஆன்மிக புத்தகம், பூஜையில் வைக்கப்பட்ட கருப்பு கயிறு, அபிஷேக நெய், ருத்ராட்சம், விபூதி, புளியோதரை, சர்க்கரைப்பொங்கல், காலண்டர் இலவசமாக வழங்கப்பட்டது. பக்தர்கள் கூறியதாவது: சபரிமலைக்கு ஆண்கள் மாலை அணிந்து கோயிலுக்கு சென்று வீடு திரும்பும் வரை வீட்டுப்பெண்கள் தான் விளக்கேந்தி விரதம் இருக்கின்றனர். மாலை அணிந்த ஆண்களை விட விரதத்தில் பெண்களின் பங்கு அதிகம். இவ்வளவு பக்தி சிரத்தையுடன் இருக்கும் பெண்கள், வயதானோர், சபரிமலை செல்ல முடியாதோர் இத்தரிசனத்தை கண்டு பரசவமடைந்தனர் என்றனர்.