பதிவு செய்த நாள்
28
டிச
2024
04:12
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஐயப்பன் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், தத்தமங்கலத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா உற்சவ அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில், ஆண்டு தோறும், மார்கழி மாதம் ஐயப்பன் திருவிழா நடத்துவது வழக்கம். நடப்பாண்டு, 81வது ஐயப்பன் திருவிழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இன்று காலை 6:00 மணிக்கு திருமஞ்சனம், 6:30 சாஸ்தா கோவிலில் ருத்ராபிஷேகம், 7:30க்கு கிருஷ்ணமூர்த்தி குழுவின் ஐயப்பன் பாடல் நிகழ்ச்சி நடந்தது. 8:00 மணிக்கு வேதபாராயணம், 8:00க்கு அலங்காரம், 9:00 மணிக்கு அர்ச்சனை, 10.00க்கு நைவேத்தியம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து 10:30 மணிக்கு மூலவருக்கு மகா தீபாராதனை நடந்தது. 11:15 மணி அளவில் நாதஸ்வரம் முழங்க உற்சவரின் ரதாரோகண நிகழ்வு நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கு கொண்டு வழிபாடுகள் செய்தனர். 11:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 3:30 மணிக்கு வைக்கம் சந்திரன் மாரார் தலைமையில் பஞ்சபாத்தியம் முழங்க திருத்தேரோட்டம் நடந்தது. 6:00 மணிக்கு சிவன் கோவிலில் பிரதோஷ விளக்கு ஏற்றும் நிகழ்வும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 11:30 மணிக்கு பழனி சிவா மற்றும் சேகர் குழுவின் நாதஸ்வர கச்சேரி நடைபெற்றது. நாளை அதிகாலை தெப்பக்குளத் தேரோட்ட நிகழ்வு, மஞ்சள்நீர் விளையாட்டு, உற்சவ மூர்த்திக்கு ஆறாட்டுடன் திருவிழா முடிவடைந்தது.