உத்திரமேரூர்; உத்திரமேரூர், சின்னநாரசம்பேட்டை தெருவில், 1,200 ஆண்டுகள் பழமையான கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசிமகம், பிரதோஷம், ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அப்போது, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கோவில் முன், அப்பகுதியை சேர்ந்த சிலர் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். மேலும், இருசக்கர வாகனங்களில் வரும் பக்தர்களும், கோவில் நுழைவாயில் முன் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. கோவில் முன் நிறுத்திப்படும் வாகனங்களை அகற்ற, பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோவில் முன் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: கோவில் முன் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும், இரவு நேரங்களில் கோவில் முன் மின் விளக்குகள் இல்லாததால், இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அப்போது, பக்தர்கள் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது மோதிக் கொள்ளும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. இதை தவிர்க்க, கோவில் நிர்வாகத்தினர் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.