தினமலர் செய்தி எதிரொலி; நவபாஷாண கடல் பகுதியில் நடைமேடை.. பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2025 10:01
தேவிபட்டினம்; நவபாஷாண நவக்கிரகம் கடல் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் பல்வேறு தோஷ நிவர்த்திகள் வேண்டியும், பரிகார பூஜைகள் செய்ய வருகின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி, தை அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடுவது வழக்கம். முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாண கடற்கரையில் திறந்த வெளியில் நடைமேடை வழியாக பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலை இருந்ததால் வெயில் நேரத்தில் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டு வந்தது. தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஹிந்து சமய அறநிலையத்துறை பொது நல நிதியில் ரூ.42 லட்சம், நவபாஷாண கோயில் நிதியில் ரூ.15 லட்சம் என ரூ.57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நடைமேடையை சுற்றிலும் பில்லர் துாண்கள் அமைத்து மங்களூர் ஓடுகள் பதித்து கூரை அமைக்கும் பணிக்கு 2023–24 சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நவகிரகங்கள் அமைந்துள்ள நடைமேடையை சுற்றிலும் கூரையில் மங்களூர் ஓடுகள் பதிக்கப்பட்டும், நடைமேடையில் கிரிம் டைல்ஸ் கற்கள் பதிக்கப்படும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் சிவகங்கை மண்டல இணை ஆணையர் பாரதி, ராமநாதபுரம் உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் பணிகளின் தரம் குறித்து நேற்று ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர். தற்போது பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் நவபாஷாணம் வரும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.