பதிவு செய்த நாள்
07
ஜன
2025
11:01
மதுரை: மதுரை, வேடர்புளியங்குளத்தில் கொரோனா, எச்.எம்.பி.வி., எனப்படும், ஹியூமன் மெட்டாநிமோ போன்ற வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட வேண்டி மந்தையம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தற்போது பரவி வரும் கொரோனா, எச்.எம்.பி.வி., போன்ற வைரஸ் பாதிப்பிலிருந்து பாதிப்பிலிருந்து மக்கள் விடுபட வேண்டி, வேடர்புளியங்குளம், ராகவேந்திரா நகர் பகுதி மக்கள் தெரு முழுவதும் மஞ்சள் நீர் தெளித்து, வேப்பிலை கட்டினர். தொடர்ந்து அனைவரும் சேர்ந்து அம்மனை வேண்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மஞ்சள் நீரை தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்டு, ஊர்வலமாக மந்தையம்மன் கோயிலுக்கு எடுத்து சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். காலரா அதிகமாக பரவிய காலத்தில் இதே வழிபாடு நடைபெற்றது. தற்போது கொரோனா, எச்.எம்.பி.வி., போன்ற வைரஸ் பாதிப்பும் அம்மன் அருளால் நீங்கும் என இப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இதேபோல், வேடர்புளியங்குளம் கிராமத்தில் அனைத்து பகுதிகளிலும் வழிபாடு நடைபெற்றது.