ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2025 10:01
ஸ்ரீவில்லிபுத்தூர்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ஆண்டாள் பாவை நோன்பு இருப்பதற்காக பெருமாளிடம் நியமனம் பெறும் பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது.
இன்று முதல் மார்கழி எண்ணெய் காப் உற்சவம் துவங்குகிறது. இதனை முன்னிட்டு நேற்று இரவு 8:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாடவீதி வழியாக பெரிய பெருமாள் சன்னதிக்கு வந்தடைந்தார். அங்கு ஏகாந்த திருமஞ்சனம், கைத்தல சேவை, மூலஸ்தானம் சேர்தல் திருவாராதனம், திருகாப்பு நீக்கல், அரையர் வியாக்கியானம், பஞ்சாங்கம் வாசித்தல், பொதுஜன சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் இன்று அதிகாலை ஆண்டாள் புறப்பாடு, பெரியாழ்வார் மங்களாசாசனமாகி மூலஸ்தானம் சேர்தல் நடக்கிறது. இதனையடுத்து இன்று (ஜன.7) முதல் ஜனவரி 14 வரை மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் துவங்குகிறது. இதற்காக தினமும் காலை 9:00 மணிக்கு மேல் ஆண்டாள் மாட வீதிகள் வழியாக மண்டபங்கள் எழுந்தருளி, திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபத்திற்கு வந்தடைகிறார். அங்கு மதியம் 3:00 மணிக்குமேல் எண்ணெய் காப்பு சேவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா, செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர். ஜனவரி 10 காலை 7:05 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.