மகா கும்பமேளாவிற்கு திருப்பதியில் இருந்து புறப்பட்ட கல்யாண ரதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2025 10:01
திருப்பதி: திருமலை திருப்பதி கோவிலில் இருந்து, உ.பி.யில் உள்ள பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்கான கல்யாண ரதம் யாத்திரை தொடங்கியது.
பிரயாக்ராஜில் கும்பமேளா வரும் பக்தர்களுக்காக, பிரயாக் ராஜில் திருமலை திருப்பதியின் மாதிரி கோவில் 2.8 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் ஏழுமலையான் கோயில் அமைத்து எல்லா சேவைகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது. இதையொட்டி ஏழுமலையானின் கல்யாண ரதம் திருமலையில் இருந்து கும்பமேளாவிற்கு புறப்பட்டது. இன்று புதன்கிழமை காலை திருமலையில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு, கூடுதல் அதிகாரி சி வெங்கையா சவுத்ரியுடன் இணைந்து கல்யாணராதத்தைக் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இது குறித்து தேவஸ்தான தலைவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; மகா கும்பமேளாவில் உ.பி.அரசால் ஒதுக்கப்பட்ட 2.8 ஏக்கர் நிலத்தில் ஸ்ரீவாரின் மாதிரி கோவிலை TTD அமைத்துள்ளது. இதில் 170 பணியாளர்களை திருப்பதி தேவஸ்தானம் நியமித்துள்ளது. இவர்கள் திருமலை மாதிரி கோயிலில் அனைத்து கைங்கர்யங்களையும் செய்வார்கள். இதன் மூலம் அனைத்து பக்தர்களும் குறிப்பாக வடமாநில பக்தர்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் தெய்வீக அருள் கிடைக்கும். திருப்பதி கோவிலில் தினமும் நடப்பது போலவே அனைத்து வழிபாடுகளும் இந்த மாதிரி கோவிலில் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.