பதிவு செய்த நாள்
08
ஜன
2025
10:01
மதுரை; அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்தும், தொடர் போராட்டம் நடத்துவது குறித்தும் ஜன.12ல் திருப்பரங்குன்றம் சன்னதி தெரு ஆர்.எஸ்.டி., திருமண மண்டபத்தில் முருக பக்தர்கள், ஹிந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவிற்கு சென்று வழிபட எந்த தடையும் இல்லை. ஆனால் சில நாட்களுக்கு முன் ஆடு பலி கொடுக்க ராஜபாளையம் மிலாம்பட்டி சையது அபுதாகீர் 53, என்பவர் முயற்சித்தார். போலீசார் தடுத்தனர். இதைகண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சி மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகள் தர்காவில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த போலீசார் அனுமதி மறுப்பதாககூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அரசு மறுப்பு: இதை மறுத்துள்ள தமிழக அரசின் சமூக ஊடக சரிபார்ப்பகம், ‘இது முற்றிலும் பொய். தர்காவில் ஆடுகளை பலிகொடுப்பது தொடர்பாக கோர்ட் மூலம் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து பொய் காரணங்களை கூறி பிரசாரம் செய்து வருவதாக’ தெரிவித்துள்ளது. இதற்கிடையே திருப்பரங்குன்றம் கந்தர் மலை புனிதத்தை காக்கும் வகையில் ஜன.12ல் காலை 10:00 மணிக்கு ஹிந்து அமைப்புகள், பக்தர்கள், பல்வேறு கட்சியினர் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது. இதில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மலையை அபகரிக்க முயற்சி; இதுகுறித்து அக்கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. பழநி ஆண்டவர் கோயில் மலை பாதை வழியாக காலம் காலமாக காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வேல் எடுத்து செல்லப்படுகிறது. மலை அடிவாரத்தில் குடி கொண்டிருக்கும் முருகப்பெருமானின் தலைக்கு மேல் ‘நாங்கள் ஆடு வெட்டுவோம்’ என்று சொல்வது முருகப்பெருமானை இழிவுபடுத்தி அவமானப்படுத்தும் செயல். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் மனதை புண்படுத்துவதோடு, ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையையும், மரபுகளையும் பறிக்கும் செயல். தற்போது திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கந்தர்மலையை சிக்கந்தர் மலை என்று அழைப்பதும், காலண்டரில் சிக்கந்தர் மலை என்று அச்சிடுவதும், அவர்களது விளம்பரங்களில் சிக்கந்தர் மலை என்று போஸ்டர் அடித்து ஒட்டுவதும், காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களை தடுப்பதுமாக சில அமைப்புகள் போட்டி போட்டு செயல்படுகின்றன. எப்படியாவது முருகப்பெருமானின் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றவும் நமது முப்பாட்டன் முருகப்பெருமானின் மலையை அபகரிக்கவும் ஆக்கிரமிக்கவும், ஹிந்து - – முஸ்லிம் மத கலவரத்தை உண்டாக்கவும் மிகப்பெரிய சதி திட்டத்தோடு சில அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதை தடுப்பது குறித்தும், தொடர் போராட்டம் நடத்துவது குறித்தும் ஜன.12ல் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இவ்வாறு கூறினார்.