பதிவு செய்த நாள்
11
ஜன
2025
11:01
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் நடனமாடி அசத்தின.
பழமையான அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அலங்கரிக்கப்பட்ட இரண்டு குதிரைகள் இசைக்கு ஏற்ப கால்களை, மேலும், கீழும், உயர்த்தி, தாழ்த்தி, நளினமாக ஆடி, பக்தர்களை பரவசப்பட வைத்தது. இசைக்கு ஏற்ப தலையை இடது, வலது, மேலும், கீழும் என அசைத்து அசத்தியது. புளியம்பட்டி அண்ணாமலையார் மன்றத்தை சேர்ந்த குழுவினர் பாரம்பரிய கயிலை வாத்தியங்களை வாசித்து பக்தர்களின் பாராட்டை பெற்றனர். தேர்த்திருவிழாவில் ஏராளமான பாக்கு மட்டைகள், டம்ளர்கள் மலை போல் குவிந்தன. பேரூராட்சி சார்பில், நான்கு லாரிகளில், 80 தொழிலாளர்கள் தேர் செல்லும்போது உடனே அதன் பின்னர் சென்று பாக்கு மட்டைகள், காகிதம் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்களை உடனுக்குடன் அகற்றி தர்மா கோவில் வீதி, சத்தி ரோடு மற்றும் கடைவீதியை தூய்மைப்படுத்தி அசத்தினர்.