ஊருக்கு உதவிய கேரள சித்தருக்கு வடமதுரையில் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2025 01:01
வடமதுரை; திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கிராமத்தில் தங்கி உதவிகள் செய்த கேரளாவை சேர்ந்த அடிகளாருக்கு நன்றி மறவாமல் மக்கள் கோயில் கட்டியதுடன் ஆண்டுதோறும் குருபூஜையும் நடத்தி வருகின்றனர்.
கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கரானந்தன். சிறுவயதிலேயே சொந்த ஊரை விட்டு சிங்காரக்கோட்டை பாறைப்பட்டியில் தங்கிய இவர் தன் வாழ் முழுவதையும் இங்கே கழித்தார். இவர் கிராமத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்ட நேரத்தில் முயற்சி எடுத்து கிணறு வெட்டினார். ஆடு, மாடு போன்றவை நோய் வாய்ப்பட்ட இவரது மருத்துவத்தால் குணமாகின. இதனால் இவரை சங்கரானந்த சுவாமிகள் என அழைத்தனர். இறுதி காலத்தில் தனக்கென சமாதியை கட்டி வைத்து உயிர் துறந்தார். கிராமத்தினர் அவரது விருப்பபடி சமாதியில் அடக்கம் செய்தனர். அவரது நினைவாக ஆண்டுதோறும் மார்கழி கார்த்திகை நட்சத்திர நாளில் அவரது சேவைக்கு நன்றிக்கடன் செய்வது போல குரு பூஜை விழா நடத்துகின்றனர். கடந்த 2015ல் சமாதி நிலையத்தை கோயிலாக மாற்றி சிவன் சிலையும் வைத்து கும்பாபிஷேகம் நடத்தினர். இங்கு குருபூஜை விழா திருவிழா போலவே நடத்தப்படுகிறது. இந்நிலையில் கருத்து வேறுபாட்டால் கோயிலை நிர்வகிக்கும் சங்கரானந்த சுவாமிகள் அறக்கட்டளை தரப்பினர் மடத்திலும், மற்றொரு தரப்பினர் ஊர்மந்தை என இரு இடங்களில் ஒரே நேரத்தில் குரு பூஜை நடந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட, குரு பூஜையில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கேரளாவில் இருந்து சங்கரானந்த சித்தரின் உறவினர்களும் வந்து குருபூஜையில் பங்கேற்றனர். இவ்விழாவிற்காக மலையாளத்தில் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து கேரளாவிலும் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.