பதிவு செய்த நாள்
11
ஜன
2025
01:01
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று இரவு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஆழ்வாருக்கு பெருமாள் காட்சியளித்ததை பக்தர்கள் தரிசித்தனர்.
சிவகங்கை சமஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் ஏகாதசியன்று தட்சிணாயனம் புண்ய காலத்தில் சயனித்து உத்தராயண புண்ய காலத்தில் எழுந்தருளி பெருமாள் சொர்க்கவாசல் எழுந்தருளுவது வழக்கம். இதனால் இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சயன,அமர்ந்த,நின்ற திருக்கோலங்களில் அருள்பாலிப்பார்.நேற்று இக்கோயிலின் மூலக்கோயிலான கோமடம் சீனிவாசப் பெருமாள் கோயில் அர்ச்சகர் மூப்பால் இறந்ததை அடுத்து, இன்று சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் காலையில் பட்டாச்சார்யர்களால் பிராயச்சித்த ஹோமம் நடத்தப்பட்டது. இதனால் பெருமாள் சயன,அமர்ந்த கோலத்தில் எழந்தருளல் நடைபெறவில்லை.
ஏகாதசி உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று காலை 11:30 மணிக்கு மூலவர் சன்னதியில் உற்ஸவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் திருமங்கையாழ்வார் திருவடி தொழுதல் நடந்தது. தொடர்ந்து நித்ய பூஜைகள் நடந்தன. இரவு 8:00 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் உற்ஸவர் எழு்நதருளி அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நின்ற கோலத்தில் ஏகாந்த சேவையில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் அருள்பாலித்தார். இரவு 10:15 மணிக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் புறப்பட்டு தாயார் சன்னதி எழுந்தருளி காட்சியளித்தார். பின்னர் ஆண்டாள் சன்னதி, பரமபத வாசல் அருகில் எழுந்தருளி வேதம் விண்ணப்பித்தல் நடந்தது. தொடர்ந்து ஆண்டாளுக்கு காட்சி அளித்தார் பின்னர் சேனை முதல்வர் ஆராதனை நடந்தது. பின்னர் இரவு 11:15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சியளித்தார். திரளாக பக்தர்கள் கூடி சொர்க்கவாசல் எழுந்தருளலை தரிசித்தனர். தொடர்ந்து பெருமாள் திருமாமணி மண்டபம் எழுந்தருளி பத்தி உலாத்துதல் நடந்தது. பின்னர் பெருமாள் தென்னமரத்து வீதி புறப்பாடு துவங்கியது. அடுத்து கல்மண்டபத்தில் திருவந்திகாப்பு நடந்து தாயார் சன்னதி எழுந்தருளினார். பின்னர் ராப்பத்து உற்ஸவத்திற்கு காப்பு கட்டி உற்ஸவம் துவங்கியது. அதிகாலை 1:30 மணிக்கு பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளினார்.