பதிவு செய்த நாள்
22
ஜன
2025
10:01
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தில், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூஜை பொருட்களுடன் பழமை வாய்ந்த பொருட்கள் ஓரிடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. பொங்கல் விழாவிற்கு, கோவிலை சுத்தம் செய்த போது, பளிங்கு கல்லாலான புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் கூறியதாவது: பளிங்கு கல்லாலான புத்தர் சிலை கண்டெடுக் கப்பட்டு உள்ளது. புத்தர் கண்களை மூடி, ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் வகையில் சிலை அமைந்துள்ளது. ஒரு அடி உயரமுள்ள சிலை, பீடத்தின் மீது அமர்ந்த நிலையில், இரு காதுகளும், தோள் பட்டை வரையில் நீண்டு இருக்கின்றன. சிலையின் மூக்கு சேதமடைந்துள்ளது. இடது தோள் பட்டை முதல், இடுப்பு வரை சீவர ஆடை அணிந்தபடி நேர்த்தியாக செதுக்கப்பட்டு உள்ளது. வலது கால், இடது தொடையின் மீதும், இடது கை, வலது கால் மீதும் வைத்த நிலையில் காணப்படுகிறது. மேலும், வலது கையின் விரல்கள் தரை நோக்கி உள்ளது. இது, உலக அமைதிக்கு கோபுரத்தில் இருக்கும், நான்கு சிலைகளில் ஒரு சிலையின் அமைப்பு என, வரலாற்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். கி.பி., 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை என, உதவி தொல்லியல் துறை ஆய்வாளர் ரமேஷ், உதவி கல்வெட்டாளர் நாகராஜன் உறுதிபடுத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.